சித்தோட்டில் பிரதான சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி அருகே ஒரு தனியார் மண்டபமும் உள்ளது. இப்பகுதி சாலையோரம் பழமையான பெரிய ஆலமரம் உள்ளது. மரத்தின் ஒரு பகுதி கிளைகள், இலைகளுடன் நன்கு வளர்ந்து பாதுகாப்பாக உள்ளது. ஆனால், சாலையை ஒட்டிய பகுதியில் உள்ள கிளை பெரும்பாலானவை காய்ந்தும், கீழ் பகுதி முற்றிலும் உடைந்து காணப்படுகிறது. 15 நாட்களுக்கு முன் பெரிய கிளை சாலையில் ஒடிந்து விழுந்து போக்குவரத்து பாதித்தது.
நேற்று(செப்.14) மற்றொரு கிளை சாலையில் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. அப்பகுதி மக்கள் கிளைகளை வெட்டி அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது.
இவ்வழியாக அதிகமாக வாகனங்கள் செல்வதால், காய்ந்த மரக்கிளைகள் ஆபத்தாக உள்ளன. பசுமையாக உள்ள மரக்கிளை நீங்கலாக, காய்ந்த மற்றும் ஒடிந்த நிலையில் உள்ள கிளைகளை முற்றிலும் அகற்ற, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.