மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (50). இவருக்கு செல்வி (40) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சரவணகுமார் பெருந்துறையில் உள்ள ஒரு பிரிண்டிங் மில்லில் தங்கியிருந்து ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் ஒரு ஆண்டுக்கு முன் விருதுநகரில் ஒரு மருத்துவமனையில் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கான சிகிச்சை எடுத்து வந்தார்.
இடையில் மருந்து மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்ட சரவணகுமார் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பாலிக்காட்டூர் பிராந்தி கடை எதிரில் சுயநினைவின்றி கிடந்த அவரை பிரிண்டிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
சரவணகுமார் இறந்ததற்கான காரணம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.