ஊத்துக்குளி அருகே உள்ள எஸ். பெரியபாளையத்தில் ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்குளி- திருப்பூர் ரோட்டில் வெள்ளியம்பாளையம் பகுதியில் இருந்து குளத்துப்பாளையம் வரை ரோடுகள் குண்டும் , குழியுமாக இருந்து வருகிறது. மேலும் இந்த ரோடு திருப்பூரில் இருந்து ஈரோடு , சேலம், பவானி, ஊத்துக்குளி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மெயின் ரோடு ஆக இருந்து வருகிறது. தினசரி திருப்பூர் பனியன் கம்பெனிக்கு செல்லும் பனியன் தொழிலாளர்கள், மற்றும் பனியன் கம்பெனி சார்ந்துள்ள இதர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் சுமார் 5000- திற்கும்மேற்பட்டவர்கள் இந்த ரோட்டை கடந்து செல்கின்றனர். வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்துள்ள இந்த ரோடு தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக ரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் விபத்து ஏற்படக்கூடிய அபாய சூழ்நிலை நிலவி வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு செய்தும் , குண்டும், குழியுமாக இருக்கும் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு உடனடியாக ரோட்டினை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும் , வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.