ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க, மாவட்ட எஸ்.பி. ஜவஹர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், பெருந்துறை எஸ்.ஐ. பாஸ்கரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், ஒருவர் பீகார் மாநிலம் பாட்னா மண்டலம் பகுதியைச் சேர்ந்த சுவார்கே லல்லோ சுவ் மகன் பிட்டு குமார் (21), மற்றொருவர் மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் பகுதியைச் சேர்ந்த மொஸ்தாக் சர்தால் மகன் ஜாகீர் (24) என்பதும் தெரியவந்தது. அவர்களை சோதனை செய்தபோது இருவரும் தலா 3 கிலோ கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தனர்.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 6 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, பங்களாப்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த, கோவை அடுத்த கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த ரவி (48) என்பவரை கைது செய்த கோவை மதுவிலக்கு போலீசார், அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.