ஈரோடு ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு ரெயில் பயணிகளிடம் மொபைல் போன், நகைகள், பயணிகளின் உடைமைகளை திருடுதல் போன்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் தினம் தோறும் காலை முதல் இரவு வரை ரெயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து ரெயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு வழியாக நாள் ஒன்றுக்கு 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. ஈரோடு ரெயில் நிலையத்தில் எப்பவும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஏதாவது விசேஷ நாட்கள் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட ரெயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் ரயில்வே நிலைய வளாகப் பகுதிகளில் சுற்றித் திரியும் சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து அவர்களது முகவரி செல்போன் எண் போன்றவற்றை சேகரித்து வருகின்றனர். பழங்குற்றவாளியாக இருந்தால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளியை நெருங்கும் சமயத்தில் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்தியபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.