ஆடை வடிவமைப்பு தொடர்பான போட்டிகளில் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி
பல்வேறு கல்லூரிகளில் நடந்த ஆடை வடிவமைப்பு தொடர்பான போட்டிகளில், ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மதுரை லேடி டோக் மகளிர் கல்லூரி, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, எஸ். என். எஸ், ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரி, திருப்பூர் சசூரி கல்லூரி குழுமங்கள், நிப்டி ஆடை வடிவமைப்பு கல்லூரி, ஈரோடு வெங்கடேஸ்வரா கலை, அறிவியல் கல்லூரி, நாமக்கல் கே. எஸ். ஆர். கல்வி குழுமங்கள் மற்றும் விவேகானந்தா மகளிர் கலை, அறிவியல் கல்லூரிகளில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு
மற்றும் பல்வேறு போட்டிகளில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத்துறை மாணவர்கள் பங்கேற்றனர். இத்துடன், திருச்சியில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் நடத்திய பேஷன் ஷோவிலும் அவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், ரூ. 62 ஆயிரம் ரொக்கப்பரிசினை கொங்கு கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் தாளாளர் பி. டி. தங்கவேல், கல்லூரி முதல்வர் ஹெச். வாசுதேவன், துறைத்தலைவர் எஸ். மஞ்சுளா மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.