ஈரோடு பூந்துறை ரோட்டில் தனியார் மெட்ரிக் பள்ளியில் 2, 500 - க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பள்ளி வளாகம் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினர். அதே சமயம் பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலை ஆய்வு செய்தபோது அதே பள்ளியில் பயின்று வரும் 9-ம் வகுப்பை சேர்ந்த இரு மாணவர்கள் அனுப்பியது தெரிய வந்தது. போலீசார் மற்றும் பள்ளியின் நிர்வாகித்தனர் இரண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். வேறு பள்ளியில் இருந்து புதிதாக வந்து சேர்ந்ததும், பள்ளி பிடிக்காததால் விடுமுறைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய
வந்தது. மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பள்ளி நிர்வாகம், போலீசார் அறிவுரை வழங்கினர்.
இது போன்ற செயலில் மீண்டும் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இதைப்போல் கடந்த வாரம் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்தும் போலீசார் , பள்ளி நிர்வாகத்தினர் வெடிகுண்டு மிரட்டல் வந்த ஈ -மெயில் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்