கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் கோயில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடித்த மூன்று பேரை கிராம மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் புகழ்பெற்ற கரியகாளியம்மன் மற்றும் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி உண்டியல் உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்நிலையில் மார்கழி மாதம் என்பதால் நேற்று அதிகாலை காலை கோயில் பூசாரி ஜெகநாதன் என்பவர் கோயிலில் பூஜை செய்ய வந்துள்ளார். அவருடன் கிராம மக்கள் சிலரும் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் 10 ஆயிரம் ரூபாயை மூன்று வாலிபர்கள் பையில் போட்டுக் கொண்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதைத்தொடர்ந்து மூன்று வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்த கிராம மக்கள் மூன்று பேரையும் கடத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து பிடிபட்ட மூன்று பேரிடமும் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரம் அருகே உள்ள மேற்குபதியை சேர்ந்த சேது(25), அய்யப்பன் என்கிற அஜித்(24), பாண்டியன்நகரை சேர்ந்த பரணி(19) என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் கடத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.