கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செட்டியம்பாளையம் ஆண்டிகாட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடுசாமி(66). இவரது உறவினர் ஒருவருக்கு கோபிநாயக்கன்காடு பகுதியில் உள்ள திருமணமண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது. இந்தத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வெங்கடுசாமி அவரது மனைவி ஆராயாள்(55) ஆகியோர் அதிகாலை வீட்டிலிருந்து காரில் கோபி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
வேட்டைக்காரன்கோயில் மின்வாரியத் துணைமின்நிலையம் முன்பு சென்றுகொண்டிருந்தபோது காரின் முன்பகுதியில் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடுசாமி காரைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு இறங்கினார். அதற்குள் கார் மொளமொளவென்று பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்துத் தகவல் அறிந்து கோபித் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்து சேதமானது.
சுபமுகூர்த்தத் தினம் என்பதால் கோபி, திருப்பூர் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருந்தது. கார் தீப்பற்றி எரியத் தொடங்கியதும், வெங்கடுசாமி காரைச் சாலையோரமாக நிறுத்திய பின்பு இருவரும் காரிலிருந்து இறங்கியுள்ளனர். கார் தீப்பற்றிய உடனே இருவரும் காரைவிட்டு இறங்கியதால், நல்வாய்ப்பாக கணவன், மனைவி இருவரும் உயிர்தப்பினர். தீவிபத்து குறித்து கோபிப் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.