கோபி: தீவைத்த மர்ம நபர்கள்... தப்பிய ரூ.1 கோடி பொருட்கள்

59பார்த்தது
கோபி அருகே உள்ள ல. கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் அலங்காரன் மனைவி அலமேலு(50). இவர் தள்ளு வண்டியில் பழங்கள் விற்பனை செய்து வருகிறார். இவருடன் இவரது தம்பி நாராயணனும் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் கோபியில் மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு இடங்களில் கோயில் திருவிழாக்களிலும் தள்ளு வண்டியில் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

வழக்கமாக விற்பனை முடிந்த பிறகு கோபி நாகர்பாளையம் சாலையில், இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள தனியார் ஸ்பின்னங் மில் வளாகத்தில் தள்ளு வண்டிகளை நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று(செப்.4) இரவும் அதே போன்று தர்பூசணி பழங்களுடன் தள்ளு வண்டியை நிறுத்தி விட்டு அலமேலுவும், நாராயணனும் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் இரவில் யாரும் இல்லாத நேரத்தில் நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தள்ளு வண்டிகளுக்கு தீ வைத்து விட்டு தப்பினர். தீ மளமளவென பரவி தள்ளு வண்டி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் ஸ்பின்னிங் மில்லில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் தப்பின.

அதே போன்று ஸ்பின்னிங் மில் அருகிலேயே ஏராளமான குடியிருப்பிகள் உள்ளது. மில்லில் தீப்பற்றி இருந்தால் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும். தீயணைப்புத்துறையிர் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. முன் விரோதம் காரணமாக தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு தள்ளு வண்டிகள், பழங்கள் முழுமையாக எரிந்து சேதமானது.

தொடர்புடைய செய்தி