ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி இறந்தார். திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 26) காலை ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வீட்டிற்கு வந்து அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் கி. வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - நான் ஒவ்வொரு முறையும் ஈரோட்டுக்கு வரும்போது இளங்கோவன் என்னை எதிர்கொண்டு வரவேற்பார். மிக சிக்கலான அரசியல் சூழ்நிலையிலும் துணிச்சலுடன் தனது கருத்தை மாற்றிக் கொள்ளாத உறுதி உடையவராக இளங்கோவன் விளங்கினார். அவருடைய மறைவு இழக்க முடியாத ஒருவரை இழந்ததுடன், யாராலும் நிரப்ப முடியாத ஒன்று. 5 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு அதை பின்பற்றப் போவதில்லை என்று கூறிவிட்டது. தமிழ்நாடு தான் எல்லா துறைகளுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.