எஸ். கே. சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில் நேற்று (மார்ச் 21) மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி தலைமை வகித்தார். பேரணியில், 5 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சத்துணவு அமைப்பாளர் மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், மாணவ, மாணவிகள் பேண்ட் வாத்தியம் வாசித்தும், அரசு பள்ளியின் பெருமைகளை எடுத்துக்கூறியும், தரமான கல்வி அனைவருக்கும் சமமாக கிடைத்திட அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் எனும் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். மேலும், பேரணி நடைபெற்ற பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்களில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
பள்ளியில் தொடங்கிய இப்பேரணி, முத்துவேலப்ப வீதி, முத்துவேலப்ப சந்து, கந்தப்ப வீதி, வாமலை வீதி, எஸ். கே. சி. ரோடு வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.