தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் சண்முகம், மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பின்னர், ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றி வரும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், தீபாவளிக்கு முன்பாக சீருடை, காலணிகள், தொழிற் கருவிகள் வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் தொழிலாளர்கள் நலச்சட்டங்களின் படி, 2 ஆண்டு பணிநிறைவு செய்த அனைவருக்கும் பணிநிரந்தரம் செய்து, பணி பாதுகாப்பும், இதர சலுகைகளும் வழங்க வேண்டும். தேசிய துப்புரவு தொழிலாளர் வாரியத்தில் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் உறுப்பினர்களாகச் சேர்த்து, அதில் உள்ள சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களின் காப்பீட்டுத்தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பணி செய்பவர்களுக்கு மற்றொரு நாள் விடுமுறையுடன் கூடிய இரட்டிப்புச் சம்பளம் வழங்க வேண்டும். ஈரோடு மாநகர் நல அலுவலர் தலைமையில் பணியாளர் குறைதீர் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து கணக்குகளையும் முடித்து, பணப்பலன்களை வழங்குவதோடு, அடுத்த மாதத்துக்கான ஓய்வூதிய ஆணையையும் வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.