ஈரோடு மேட்டூர் சாலையில் அமைந்துள்ள யுனிக் எக்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளை நிறுவனத்தை துவங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தில், 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 9 ஆயிரம் வீதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், 5 லட்சம் முதலீடுக்கு மாதம் 75 ஆயரம் வீதம் 7 லட்சத்து 50 ஆயிரமும், 25 லட்சத்திற்கு 5 வருடத்தில் 4 தவணையாக 83 லட்சமும் தருவதாக கவர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை மட்டுமே இத்திட்டம் செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டதை நம்பி, ஈரோடு, மதுரை, போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் சுமார் 1, 200 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதலீடு செய்த முதல் இரண்டு மாதத்திற்கு, திட்ட அறிவிப்பின் படி பணத்தை திருப்பி கொடுத்த அந்நிறுவனம், அதன் பிறகு பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுகுறித்து பணத்தை முதலீடு செய்தவர்கள் கேட்டபோது, உரிய விளக்கம் அளிக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.