ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த ஷைலேஷினி என்ற 11 வயது சிறுமி தனது வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்குவதற்காக சென்று விட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது பண்ணாரியிலிருந்து பவானிசாகர் நோக்கி அதிவேகமாக வந்த பனியன் கம்பெனிக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் பேருந்து அந்த சிறுமியின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சத்தியமங்கலம் செண்பகபுதூர் பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து மோதி 11 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.