சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள ஆடு மற்றும் மாடுகளை வேட்டையாடி வருகின்றன. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினரிடம் தொடர்ந்து புகார் அளித்தும் வனத் துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் வனத்துறை அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள கேஸ் குடோன் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று கால்நடைகளை வேட்டையாடிய சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்திற்கு பின்பாவது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.