ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. குறிப்பாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழிமறித்து நிற்பதும், கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது. திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் யானை சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது சாலை அருகே வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து நின்றது. நீண்ட நேரமாக அங்கு நின்ற ஒற்றை யானை அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மேற்கொண்டு அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாததால் வாகனத்தை நிறுத்தினர்.
சிறிது நேரம் திம்பம் மலைப்பாதை வளைவில் நின்ற ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர். இதன் பிறகே அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.