ஆப்பக்கூடல் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் ஊராட்சி செயலாளரை முற்றுகையிட்ட பெண்கள் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி ஊராட்சிக்குட்பட்ட 9வது வார்டு ஒரிச்சேரி பஸ் நிறுத்தப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஆற்று தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என தினமும் தண்ணீர் மாறி மாறி வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக, கடந்த 15 நாட்களாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.
இதனால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு சென்றனர்.
ஆனால், ஊராட்சி செயலாளர் பூங்கோடி ஊராட்சி பகுதியில் வீட்டு, தண்ணீர் வரி வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, வரி வசூல் செய்யும் இடத்திற்கே பக்கெட் மற்றும் காலி குடங்களுடன் சென்ற பெண்கள், ஊராட்சி செயலாளர் பூங்கோடியிடம் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.