காரை விற்று போலி சாவி மூலம் திருடிய புரோக்கர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பி பிளாக் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சபி(வயது 38). இவர் அண்ணாமடுவில் இரும்பு மற்றும் ரோலிங் சாட்டர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பைனான்ஸ் மூலம் வாங்கிய காரை கடையின் முன்பு கடந்த 12ம் தேதி இரவு நிறுத்தி வைத்திருந்தார். 13ஆம் தேதி காலை சென்று பார்த்தபோது அந்த கார் காணாமல் போனது. இதன் மதிப்பு 5 இலட்சம் ஆகும். பின்னர் இதுகுறித்து அவர் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், பவானி கோட்டம் குற்றப்பிரிவு போலீசார் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பக புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் இருவரையும் பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் குந்துபாயூரைச் சேர்ந்த காதர் பாஷா(வயது 40), நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டை சேர்ந்த ரசித்(29) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இதில் கதிர் பாட்ஷா கார் புரோக்கராக செயல்பட்டதும், போலி சாவி மூலம் காரை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.