ஈரோடு: காஞ்சி கோவில் தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சாவு
ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் அடுத்துள்ள புலவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (72). இவரது மனைவி கண்ணம்மாள் (62). கடந்த 11-ம் தேதி கண்ணம்மாள் தனது கணவருக்காக விறகு அடுப்பில் சுடு தண்ணீர் காய வைத்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பொன்னுசாமி அருகில் இருந்த கல்லின் மீது அமர்ந்து பீடி பற்ற வைப்பதற்காக அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தென்னை ஓலையை எடுத்து பீடி பற்ற வைத்துள்ளார். அப்போது தென்னை ஓலையில் இருந்த தீக்கங்கு பொன்னுசாமி அணிந்திருந்த வேட்டியின் மீது விழுந்து தீ பற்றியது. தீ மளமளவென பரவி அவரது இடுப்புக்கு கீழ் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கண்ணம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர், அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் காஞ்சிகோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி சிகிச்சை பெற்று, உயர் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பொன்னுசாமி, சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.,18) உயிரிழந்தார். இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.