திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி ஏ. டி காலனியில் காளியம்மன், பட்டாளம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று இரவு கோவில் அருகே உள்ள நாடக மேடையில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை பார்க்க அம்மாபட்டி மற்றும் கொடிக்காபட்டி கிராமங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கிராம மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இதனை தடுத்துநிறுத்த கிராம மக்களை இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதால் கிராம மக்களுக்கும் இளைஞர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேடசந்தூர் போலீசார் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த இளைஞர்கள் மது அருந்திவிட்டு மீண்டும் பூத்தாம்பட்டி சென்று அங்கு இருந்த கிராம மக்களை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அங்கு இருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.