அகரம் பேரூராட்சிக்குட்பட்ட அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் பேக்கரி கடை, மற்றும் கறிக்கடை வைத்து நடத்தி வருபவர் செலிக்ஸ் (வயது 48). இவரது மகள் 17 வயது சிறுமி. செலிக்ஸ் மற்றும் அவரது மனைவி வெளியூருக்கு சென்று விட்ட நிலையில் சிறுமி தனது பாட்டி
அர்பசாதமேரியுடன் (62) வீட்டில் இருந்து உள்ளார். இரவு செலிக்சின் வீட்டிற்கு வந்த 32 வயது இளைஞர் சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயற்சித்துள்ளார். இதனை தடுத்த மூதாட்டியை தாக்கி விட்டு சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்க செலிக்ஸ் இரவு வேடசந்தூர் போலீஸ் நிலையம் சென்ற பொழுது போலீசார் அனைவரும் ரோந்து பணிக்கு சென்று விட்டதால் நீங்கள் நாளை காலை வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து செலிக்ஸ் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இளைஞரால் தாக்கப்பட்ட மூதாட்டி வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மூதாட்டியை தாக்கி விட்டு சிறுமியை கடத்திச் சென்ற துணிகர சம்பவத்தால் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.