திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மேற்கு பூத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கொத்தனார்
வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், சரத்குமார் (25) என்ற மகனும்
சங்கீதா என்ற மகளும் உள்ளனர். சரத்குமார் தனியார் வாகனம் ஓட்டும் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகவில்லை.
சரத்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி தனது தந்தையிடம் தகராறு செய்தார். அதன்படி நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சரத்குமார் தனது தந்தையை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது மகன் சரத்குமாரை வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் தள்ளி வெளியே பூட்டி விட்டார்.
இன்று காலையில் பார்த்த போது பின் தலையில் ரத்தக் காயங்களுடன் சரத்குமார் இறந்து கிடந்தார். இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரத்குமார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது குடும்பத்தினர் தெரிவிக்கையில், போதையில் அறையில் வைத்து பூட்டியதால் சரத்குமார் மேற்கூரையை உடைத்து தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இருந்தபோதும் ஆறுமுகம் தள்ளி விட்டதால் அவர் இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.