திண்டுக்கல் மாவட்டம் செந்துறை ஊராட்சியில் கருத்தநாயகன்பட்டி, களத்துப்பட்டி கிராமங்கள் உள்ளன. ஸ்ரீ சக்திவிநாயகர், ஸ்ரீ மலையாள பகவதியம்மன், ஸ்ரீ மலையாள கருப்பசாமி, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் நேற்று முதல் நாள் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் லக்ஷ்மி ஹோமம், மஹாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, தேவதா நுஞ்சை, வேத பாராயணம், வேதிகார்ச்சனை, ஹசர் நாம பாராயணம், பூர்ணாகுதி மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து நேற்று அதே யாகசாலையில் மூவுலகமும் போற்றும் யாகாராம்பம், கோபுரகலசம் வைத்தல், சதுர்த்வார பூஜைகள், இரண்டாம் மற்றும் மூன்றாம், நான்காம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கங்கை, காவேரி, கரந்தமலை, அழகர்மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் கோவிலைச் சுற்றி நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்கள் மீது புனித தீர்த்தமும் தெளிக்கப்பட்டது. பூஜை மலர்களும் வழங்கப்பட்டன.