திண்டுக்கல் மாவட்டம், டி. கூடலூர் பகுதியைச் சேர்ந்த சீலன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், டி. கூடலூரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக பணியாற்றி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். இதையடுத்து, எனக்குச் சேர வேண்டிய பணிக்கொடை, பணப் பலன்களை வழங்கக் கோரி தொடர்புடைய அலுவலர்களிடம் முறையிட்டேன். ஆனால், ஊராட்சிகள் சட்டப்படி எனக்கு பணப் பலன்கள் வழங்க இயலாது என அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெற எனக்கு உரிமை உண்டு எனவும், தொடர்புடைய அலுவலர்கள் எனக்குச் சேர வேண்டிய தொகையை வழங்க வேண்டும் எனவும் கடந்தாண்டு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்தத் தொகையும் எனக்கு வழங்கவில்லை. எனவே, எனக்குச் சேர வேண்டிய பணப் பலன்களை வழங்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.