பழனி நகரில் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படுகிறது. இதற்காக நகரில் உள்ள வீடு, வணிக நிறுவனங்களிடமிருந்து சொத்துவரி, குடிநீர்வரி, தொழில்வரி மூலம் நிதி வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நகராட்சி பகுதியில் சொத்துவரி, தொழில்வரி பல கோடி ரூபாய் பாக்கி உள்ளது. அதை வசூல் செய்யும் பணியில் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வரி, வாடகை பாக்கி உள்ள வீடு, கடைகளுக்கு மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் வரிவசூல் ஆகாததால் 'சீல்' நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, பழனி நகராட்சியில் சுமார் ரூ. 15 கோடி வரை சொத்துவரி பாக்கி உள்ளது. மேலும் கடை வாடகை, தொழில்வரியும் பாக்கி உள்ளன. இதில் சொத்துவரியை விரைவாக வசூலிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 5 பேர் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் வீடு, வணிக நிறுவனங்களுக்கு சென்று வரிவசூலில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் நாட்களில் அதிகமாக வாடகை, சொத்துவரி செலுத்தாத வணிக நிறுவனங்களில் 'சீல்' வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.