பழனி: கோடை காலத்தை முன்னிட்டு வைக்கோலை இருப்பு வைக்கும் விவசாயிகள்

63பார்த்தது
பழனி: கோடை காலத்தை முன்னிட்டு வைக்கோலை இருப்பு வைக்கும் விவசாயிகள்
பழனி சுற்றுவட்டார பகுதிகளில் பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணை தண்ணீர் மூலம் நெல் சாகுபடி அதிகமாக நடக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையை அடுத்து ஆயக்குடி, பாலசமுத்திரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி நடந்தது. தற்போது நெற்பயிர் விளைச்சல் அடைந்ததால் அங்கு அறுவடை பணி நடக்கிறது. அறுவடை செய்த நெல்லை வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். 'நெல் விற்பனை ஒருபுறம் இருக்க நெற்பயிரில் இருந்து கிடைக்கும் வைக்கோல் விற்பனை மற்றும் அதனை இருப்பு வைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. 

அதாவது இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி எடுப்பதால் தீவன தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க விவசாயிகள் வைக்கோலை இருப்பு வைக்கின்றனர். கால்நடை இல்லாத விவசாயிகளிடம் வெளியூர் வியாபாரிகள் போட்டிபோட்டு வைக்கோலை வாங்கி செல்கின்றனர். இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, கால்நடைகளுக்கு உலர் தீவனமாக ஆண்டு முழுவதும் வைக்கோல் பயன்படுகிறது. எனவே அறுவடை காலத்தில் வைக்கோலை வாங்கி இருப்பு வைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வருகிற 3 மாதங்களில் மாடுகளுக்கு உலர்தீவனமாக வைக்கோல் தேவைப்படும். தற்போது ஒரு கட்டு வைக்கோல் ரூ. 150 வரை விற்கப்படுகிறது. ஆனால் வெளியூர் வியாபாரிகள் வைக்கோல் கட்டுகளை மொத்தமாக வாங்கி ரூ. 200 வரை விற்பனை செய்கின்றனர் என்றனர்.

தொடர்புடைய செய்தி