பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டியை சேர்ந்த சசி மகன் சங்கர் (வயது 31). அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் மகேஷ் (31). நண்பர்களான இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நரிக்கல்பட்டியில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர். பழனி-தாராபுரம் நான்குவழிச்சாலையில் மானூர் அருகே சென்றபோது கோவையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரை, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த சங்கர், மகேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த கோவை அரிசிப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி அருகே விபத்தில் தொழிலாளர்கள் இருவர் பலியான சம்பவம் நரிக்கல்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.