ஆன்லைன் தரிசனம் ரத்து - கோவில் நிர்வாகம் தகவல்

67பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. பாதாளத்தில் பூமிக்கு அடியில், செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் பாதாள செம்புமுருகன் என்ற பெயர் உருவானது. பாதாளத்தில் உள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் செல்கின்றனர். இங்கு வழங்கப்படும் கருங்காலி மாலைகளை அணிவதன் மூலம், பஞ்ச பூதங்களின் துணை கிடைக்கும் என்றும் எதிர்மறை சக்திகள் விலகும் எனவும் குழந்தை பேறு, கல்வி ஞானம் அதிகரிப்பதுடன் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

இதுமட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு, மன இறுக்கம் விலகி உள்ளுணர்வு மேம்பாடு அடைவதுடன், ரத்த அழுத்தம் சீராகும் என்றும் நம்பப்படுகிறது. சமீப காலமாக ஆன்லைனில் பதிவு செய்து பின்னர் முருகனை தரிசிக்க கூடிய நடைமுறை இருந்தது. ஆன்லைன் முறையை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தமிழ் புத்தாண்டு, பெரிய கார்த்திகை, கந்த சஷ்டி விரதம் நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் ஆன்லைன் தரிசனம் ரத்து செய்து அனைவருக்கும் இலவச பொது தரிசனம் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி