திண்டுக்கல் மாவட்டம் தோப்பூர் சுக்காம்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு 12 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூக்குழி பூஜை மற்றும் சிறப்பு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கள் மாலை அணிந்து, கங்கனம் கட்டி விரதம் இருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பக்தர்கள் ஊஞ்சலூர் காவேரி ஆற்றில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து கரகம் பாலித்து, பூக்குழி வளர்க்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இன்று காலை பக்தர்கள் முளைப்பாரி மற்றும் தீர்த்தக் குடங்களை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அதன்பின்னர் கோவில் முன்பாக 15 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட பூக்குழியில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து அம்மனுக்கு கடன் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கடல் காவேரி ஆகாச கங்கை ஆகிய புனித தீர்த்தங்களை முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.