எலுமிச்சை வரத்து குறைவால் விலை உயர்வு

4509பார்த்தது
எலுமிச்சை வரத்து குறைவால் விலை உயர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில், சிறுமலை, தாண்டிக்குடி, பண்ணக்காடு, ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி அதிகளவு நடைபெறுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் எலுமிச்சை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுவது வழக்கம். திண்டுக்கல்லைப் பொருத்தவரை, ரயில் நிலையம் பகுதியிலுள்ள சிறுமலை செட் பகுதிக்கு விவசாயிகள் கொண்டு வரும் எலுமிச்சை, வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடுபடும். கடந்த வாரம் கிலோ எலுமிச்சை ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தாலும், நத்தம், திண்டுக்கல், பழனி பகுதிகளில் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதாலும் எலுமிச்சைகளின் தேவை அதிகரித்துள்ளது. தற்போது திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் எலுமிச்சை விளைச்சலும் குறைந்திருக்கிறது.

இதனால், ஆந்திர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் சந்தைக்கு எலுமிச்சை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைந்து தேவை அதிகரித்திருப்பதால், எலுமிச்சை விலை கிலோவுக்கு ரூ. 30 வரை அதிகரித்தது. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை எலுமிச்சை விலை ரூ. 2, 500-லிருந்து ரூ. 4 ஆயிரமாக உயா்ந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி