உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சாரத்துறை, வனத்துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நிறைவேற்றப்படவுள்ள திட்டப்பணிகள் குறித்தும் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை, அறிவிக்கப்பட்ட பணிகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.