திண்டுக்கல் மாவட்டம், நெய்க்காரபட்டி பெரியகலையமுத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் சார்பில், வரும் 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கும், கால்நடைகளுக்கும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அளவிலான குழுக்கள் நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ் பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. பழனி கோட்டத்துக்குள்பட்ட பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 27 கால்நடை மருந்தகங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சான்றிதழ்களை அந்தந்த மருந்தக மருத்துவர்கள் ஆய்வு செய்து வழங்கி வருகின்றனர். பெருமாள்புதூர் கால்நடை மருந்தகத்தில் நான்கு ஜல்லிக்கட்டு காளைகள் ஆய்வு செய்யப்பட்டு இவற்றுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து கால்நடை உதவி மருத்துவர் முருகன் கூறியதாவது: அரசு வழிகாட்டுதலின்படி, நாட்டின காளைகளுக்கு மட்டுமே பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும். கலப்பின காளைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படாது என்றார். தகுதி பெற்ற காளைகள் விவரம் உடனுக்குடன் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.