திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி உறுப்புதானம் செய்தவரின் உடலுக்கு, அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உடல் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வெறியபூர் அருகே உள்ள அண்ணாமலை புதூரில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிவராஜ் வயது(39) என்பவரின் உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட நிலையில், அண்ணாமலை புதூரில் அன்னாரின் இறுதி சடங்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி நேரில் சென்று மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த சிவராஜ் அவர்களின் உடலுக்கு, தமிழக அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.