திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் பிரசித்தி பெற்ற வாழைக்காய் மார்க்கெட் உள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் இந்த மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலம் நடைபெறும். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வாழைத்தார்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்குள்ள மொத்த வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி வெளியூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
இதற்காக ஏலம் விடப்படும். இதில் பங்கேற்க சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்தும், சிறு நகரங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவர். இந்நிலையில், பருவம் தவறிய மழை உள்ளிட்ட காரணங்களால் வாழைத் தோப்புகளில் தற்போது விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால், வாழைத்தார் வரத்தும் குறைவாக உள்ளது. மேலும், தற்போது தொடர் கல்யாண முகூர்த்தங்கள் வருவதால் தேவை அதிகமாக உள்ளது.
இதனால், வாழைத்தார் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ. 1800க்கு விற்ற செவ்வாழைத்தார் நேற்றைய சந்தையில் ரூ. 2500க்கும் ஏலம் போனது. இதேபோல், ரூ. 500க்கு விற்ற ரஸ்தாலி தார் ரூ. 700, ரூ. 500க்கு விற்ற நாட்டு வாழைத்தார் ரூ. 600, ரூ. 400க்கு விற்ற பூவன் வாழைத்தார் ரூ. 500 என ஏலம் போனது. இதனால், வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.