திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை, பிச்சிப் பூ, முல்லை, சம்பங்கி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்கள் பயிரிட்டு விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது.
இங்கு தயாராகும் பூ மாலைகள் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கோவில் திருவிழாக்களுக்கும், திருமண விஷேசங்களுக்கும் மாலைகள் இங்கிருந்து அதிகளவில் தயார் செய்து அனுப்பப்படுகிறது.
வரும் 7-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு உலர் பழங்களால் ஆன மாலை செய்ய, பக்தர் ஒருவரால் ஆர்டர் செய்யப்பட்டது. நிலக்கோட்டையைச் சேர்ந்த பூ வியாபாரி ஆறுமுகம் என்பவர், டிரை புருட் மாலைகளை கடந்த 10 நாட்களாக சுமார் 150 பேரை வைத்து வேலை செய்து, ரூ 12 லட்சம் செலவில் 200-க்கும் மேற்பட்ட மாலைகள் தயார் செய்துள்ளார்.
சுமார் 4 அடி முதல் 12 அடி உயரம் கொண்ட 200-க்கும் மேற்பட்ட மாலைகளில் முழுக்க முழுக்க பிஸ்தா, முந்திரி, பாதாம், ஜெர்ரி, கறுப்பு திராட்சை போன்ற சத்து மிக்க உலர் பழங்களை சீராக வடிவமைத்து தயார் செய்துள்ளார். இந்த மாலை தயார் செய்யும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பயபக்தியுடன் தயார் செய்து வருகின்றனர். இந்த மாலை செய்வது இந்த பகுதியில் செல்லும் மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.