கொடைக்கானல்: அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை

79பார்த்தது
கொடைக்கானல்: அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல்களைப் பெற்ற மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த வெரோனிகா மேரி கூறியதாவது: கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் 2023-ம் ஆண்டில் 13,623 உள் மற்றும் 1,35,307 வெளி நோயாளிகளும், 2024-ம் ஆண்டு 12,869 உள் மற்றும் 1,26,026 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை அதிகமாக இருப்பது மருத்துவச் சேவையில் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. 

சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலையில் 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மருத்துவ சிகிச்சைக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையைத்தான் நம்பி உள்ளனர். மருத்துவர் பற்றாக்குறையால் சில முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் இதர மருத்துவ சேவைகளுக்கு மக்களை வத்தலகுண்டு அல்லது திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். பரிந்துரைகள் அதிகரிப்பதால் ஏழை, நடுத்தர நோயாளிகள் மலையிலிருந்து தரைப் பகுதியான வத்தலகுண்டு அல்லது பழநிக்கு அலைக்கழிக்கப்படுவதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி