திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை முன்பு நீண்ட நேரமாக 3 வயது பெண் குழந்தை ஒன்று தனியாக உட்கார்ந்து இருந்தது.
இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் குழந்தையிடம் உனது பெயர் என்ன? எந்த ஊர்? யாருடன் வந்தாய் என்று விசாரித்த போது குழந்தை பதில் சொல்ல முடியாமல் இருந்தது.
வேடசந்தூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது கூவக்காபட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் அங்கு பரபரப்பாக வந்து, இந்த குழந்தை தனது அக்காள் நந்தினியின் மகள் காயத்திரி என்றும், தான் வேடசந்தூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார்.
சிறுமி காயத்ரியை உட்கார வைத்து விட்டு அருகே உள்ள தனது நண்பரை பார்க்க சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து சிறுமி காயத்ரியை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவரது பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கிக்கொண்டு, அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.