திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மருதூர் அருகே உள்ள கோட்டைப்பட்டியில் பெயில் தாத்தன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்துடன் திருவிழா தொடங்கியது.
இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற திருவிழாவில் 16 நாயக்கர் மன்னர்களுக்கு கட்டுப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நாயக்கர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர். விழாவில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை, தேனி, கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான நாயக்கர் சமுதாய பொதுமக்கள் தங்களது நாடுகளுடன் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும், தலையில் துண்டும் கட்டியிருந்தனர். திருவிழாவில் இன்று மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியில் தரையில் போடப்பட்டிருந்த வெள்ளை துணியை தாண்ட வைத்தனர். இதில் 1000 சாமி மாடுகள் பங்கேற்றன. மாலை தாண்டுதலில் முதல் மற்றும் 2-வது மற்றும் 3-வது இடங்களை பிடித்த சாமி மாடுகளுக்கு தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், எலுமிச்சம்பழம், மஞ்சள் தூள் பரிசாக வழங்கப்பட்டன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். விழாவில் ஊர் மக்கள் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.