திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மாநில தலைவர் ஒன்றி ராஜன் தலைமையில் மனு கொடுத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்கப்படுகிறது. அம்முறையை ரத்து செய்து கால்நடை பராமரிப்பு துறை முத்திரை உடைய டோக்கன்களை விழா நடத்தும் கமிட்டியினர்கள் மூலம் வழங்க வேண்டும். காளையின் கொம்புகள் அரசின் விதிப்படி கூர்மை இல்லாமல் மட்டமாக வைத்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக் குப்பி போட சொல்வது இயலாத காரியமாகும். ஏனெனில் மாடுகளின் கொம்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி அளவில் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 80 ஊர்களுக்கும் மேல் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. தற்போது 12 ஊர்கள் மட்டுமே உள்ளது. வழக்குகள் நடைபெறுவதால் அநேக ஊர்கள் அரசு முறைப்படி தொடர்ந்து 5 ஆண்டுகள் நடத்த இயலவில்லை. இதனால் அவர்களிடம் முறையாக ஆவணம் இல்லை என அநேக ஊர்கள் அரசிதழில் இடம் பெறாததால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த அனைத்து ஊர்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த ஆவணம் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு நல வாரியம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக வழங்கப்பட்டது.