திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது தாத்தாவிற்கு சொந்தமான அரை ஏக்கர் தோட்டத்து வீடு சித்தையன் கோட்டையில் உள்ளது.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வரை தோட்டத்து வீட்டிற்கு சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பாலமுருகன் வரி கட்டி வந்துள்ளார். கடந்த நான்கு வருடமாக தோட்டத்து வீட்டிற்கு பேரூராட்சி நிர்வாகம் வரி வாங்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
பாலமுருகன் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி சித்தையன்கோட்டையில் உள்ள தாத்தாவிற்கு சொந்தமான தோட்டத்து வீட்டிற்கு பேரூராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்ய வேண்டும், மேலும் அந்த நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாலமுருகனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் பாலமுருகன் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார்.