திராவிடர் கழகம் சார்பில், திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டி தலைமை தாங்கினார். இளைஞரணி தலைவர் சக்திசரவணன், துணைச்செயலாளர் வல்லரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
இதில் மாவட்ட தலைவர் ஆனந்த முனிராசன், தலைமை கழக அமைப்பாளர் வீரபாண்டியன், தந்தை பெரியார் திராவிடர் கழக கொள்கை பரப்பு செயலாளர் துரை சம்பத் ஆகியோர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்த மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திராவிடக் கழகத்தினர் மற்றும் தோழமைக் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். நிறைவாக மாவட்ட மாணவரணி தலைவர் தமிழரசன் நன்றி கூறினார்.