திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், சித்தையன்கோட்டை பகுதியில் கோழிப் பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவரது கோழிப் பண்ணையின் மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. சில நிமிடங்களில் தீ மளமளவென கோழிப் பண்ணை முழுவதும் பரவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள் பண்ணையில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் கருகி உயிரிழந்தன. மின் கசிவு காரணமாக தீ பிடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வருவாய் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.