நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன். இவர் நெசவு செய்த காட்டன் சேலை தற்போது தேசிய கைத்தறி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 17 கைத்தறி நெசவாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், தமிழ்நாட்டில் 2 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கைத்தறி துறையின் கீழ் செயல்படும் நல்லாம்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலகிருஷ்ணன் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக கூலிக்கு காட்டன் சேலைகள் நெசவு செய்து கொடுத்து வருகிறார். இதனை சங்கத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் நெசவு செய்து சேலையாக நெசவு நெய்து தருகின்றனர். இந்த சேலைகள் தமிழ்நாடு முழுவதும் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இடங்களுக்கு விற்பனைக்காக செல்கிறது. இந்த நிலையில், பாலகிருஷ்ணன் நெசவு நெய்த காட்டன் சேலையில் யானை, மயில், அன்னம், ருத்ராட்சம், மாங்காய் டிசைன் எனப் பிரத்தியோகமாக 3 நாட்கள் நெய்து இந்திய தேசிய கைத்தறி தேர்வு ஆணையத்திற்கு ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அனுப்பியுள்ளது. தற்போது அந்த காட்டன் சேலை தேசிய கைத்தறி விருதுகளை பெற்றுத் தந்துள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய கைத்தறி தின விழாவில் மத்திய அரசால் "தேசிய கைத்தறி நெசவாளர் விருது 2023" பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட உள்ளது.