திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் துப்பறியும் நாய் படை பிரிவில் பணிபுரிந்த லீமா என்ற நாய் பணி நிறைவு விழா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மோப்பநாய் லீமாவிற்கு மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து நன்றியை தெரிவித்தார். இதுகுறித்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது,
"திண்டுக்கல் துப்பறியும் நாய் பிரிவில் நான்கு துப்பறியும் நாய்கள் உள்ளன இதில் 2 நாய்கள் வெடிகுண்டு மோப்ப நாய்களாகவும் 2 நாய்கள் குற்றச் செயல்கள் கண்டுபிடிக்க கூடிய மோப்ப நாய்களாகவும் பயிற்சி அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், லீமா என்ற நாய் திண்டுக்கல் காவல்துறையில் 45 நாட்களில் சேர்ந்தது 8 ஆண்டுகளாக வெடிகுண்டு கண்டுபிடிப்பதில், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்தது.
தற்போது 8 ஆண்டுகள் பணிபுரிந்த லீமா என்ற நாய்க்கு மருத்துவரின் சான்றிதழ் பெற்று பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஆயுதப்படை டிஎஸ்பி. ஜோசப்நிக்சன், மாவட்ட குற்ற பதிவேடு கூடம் டிஎஸ்பி. சிவக்குமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன், மோப்பநாய் படை பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.