திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை மலைகளின் சிற்றரசி என அழைக்கப்படும் வகையில் சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனுமன் இலங்கைக்கு சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும் வழியில், அதில் இருந்து ஒரு பகுதி கீழே விழுந்தது. இதுவே சிறுமலை என அழைக்கப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. இதனால் மூலிகைகள் நிறைந்த மலையாக சிறுமலை காணப்படுகிறது. அடர்ந்து நீண்ட வனப்பகுதியாக உள்ளது.
திண்டுக்கல் அருகே தொடங்கி மாவட்ட எல்லையான வாடிப்பட்டி வரை சிறுமலை நீண்டுள்ளது. இன்னமும் பழங்குடியினர் தங்கள் பழமை மாறாமல் சிறுமலை வனப்பகுதியில் வசித்து வருகின்றனர். இங்கு காபி, மிளகு, சவ்வரிசி உள்ளிட்ட மலை விவசாயமும் நடைபெற்று வருகிறது. இதனால் இயற்கை எழில் மாறாமல் உள்ள சிறுமலையை சுற்றுலாத்தலமாக்கினால் செயற்கைத்தன்மையுடன் மாறிவிடும் என்ற அச்சமும் இயற்கை, வன அலுவலர்களிடம் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் ஆட்சியராக டி. ஜி. வினய் இருந்தபோது, சிறுமலையை சுற்றுலாத்தலமாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு சிறுமலை பகுதியில் சுற்றுலாத் துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு வாட்சிங் டவர் அமைப்பது, குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது, அங்குள்ள சிறிய குளத்தில் படகுசவாரிக்கு ஏற்பாடு செய்வது என பரிசீலிக்கப்பட்டது.