திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு பகுதியான ரவுண்ட் ரோட்டில் இருக்கக்கூடிய அங்கன்வாடி மையம். பல குழந்தைகள் பயிலும் இந்த அங்கன்வாடி மையம் மிகவும் சிதிலடைந்து எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் காணப்படுகிறது. இந்த அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அங்கன்வாடி பின்புறத்தில் உள்ள இடத்தில் புதர் மண்டி உள்ளது. மழைக்காலங்களில் முழுவதுமாக தண்ணீர் தேங்கி நிற்கும் அவலநிலை. இந்த அங்கன்வாடி மையத்தில் கழிப்பிட வசதி ஏதும் இல்லை. பெற்றோர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடமும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்திலும் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
தற்காலிகமாக மாற்று இடத்தில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று பதில் அளிக்கின்றனர். இந்த பகுதியில் ஒரு இடத்தை வாங்கி புதிய கட்டிடம் கட்டுவதாக கூறுகின்றனர். பல வேலைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும்போது குழந்தைகள் இருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு ஒரு கட்டிடம் இல்லாதது வருத்தத்திற்குரியதாக உள்ளது. மழைநேரத்தில் பாம்புகள் உள்ளே வரும் சூழ்நிலை உள்ளது. இந்த ஒரு சூழ்நிலையில் இந்த அரசும் மாநகராட்சி நிர்வாகமும் இந்த குழந்தைகளுக்கு என்ன வழிவகை செய்யப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.