திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கோம்பைபட்டியைச் சேர்ந்தவர் முருகன். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவரது மகள் பார்வதி (வயது 26) என்பவருக்கும் சிறுமலை தென்மலை கருப்பு கோவில் பகுதியில் வசிக்கும் செல்வக்குமார் (29) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
செல்வக்குமார் விவசாய கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வக்குமார் மற்றும் அவரது பெற்றோர் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என எதிர்பார்த்து இருந்துள்ளனர். ஆனால் 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பார்வதியை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் கம்பியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் அலறியடித்து வலியில் துடித்தவாறு பார்வதி வெளியே ஓடி வந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பார்வதி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
செல்வக்குமார் மீது வழக்கு பதிவு செய்து 3 குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.