ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 30-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்பட்டது. இதில் ஈரோடு கே. ஓ. எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. திருவண்ணாமலை விளையாட்டு விடுதி அணி 2-ம் இடமும், புதுக்கோட்டை விளையாட்டு விடுதி அணி 3-ம் இடமும், திண்டுக்கல் அணி 4-ம் இடமும் பிடித்தன. அதன் பிறகு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தமிழ்நாடு கால்பந்து கழக தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த திண்டுக்கல் ஹாக்கி சங்க ஒருங்கிணைப்பாளர் இந்திரா துவாரகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை, ஹாக்கி விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
மேலும் போட்டியில் முதலிடம் பிடித்த அணிக்கு ரூ. 30 ஆயிரம், 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 20 ஆயிரம், 3-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 15 ஆயிரம், 4-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.