போலி கடன் செயலிகளில் கடன் வாங்கி அல்லல்படுவதை தவிர்க்க தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களுக்கு திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அறிவியல் வளர்ச்சியால் அனைவரும் உள்ளங்கையில் உலக விஷயங்களை அறிந்து கொள்கிறோம். இதனால் பயன்பாடுகள் அதிகம் இருந்தாலும் மோசடிகளும் நடக்கின்றன. அந்த வகையில் வங்கி அதிகாரி போன்று பேசி மோசடி செய்கின்றனர். அதன்மூலம் கடன் வாங்கியவர் மற்றும் அவருடைய உறவினர்கள், நண்பர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இதனால் அவமானத்துக்கு பயந்து பலர் கொடுக்கின்றனர். இதுபோன்ற மோசடி நபர்கள் வெளிமாநிலங்களில் இருந்து கைவரிசை காட்டுவதால் எளிதில் சிக்குவதில்லை. அதேநேரம் போலி கடன் செயலிகளில் கடன் வாங்கி அல்லல்படும் நபர்கள் பெரும்பாலும் தனியார் நிறுவன ஊழியர்கள், மில் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களாகவே இருக்கின்றனர். அதுபோன்று பணத்தை இழந்தது தொடர்பாக திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன. எனவே போலி கடன் செயலியில் கடன் பெற்று அல்லல்படாமல் தவிர்ப்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இதற்காக கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், மில்களுக்கு சென்று மோசடிகள் குறித்து எச்சரித்து வருகின்றனர்.